பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிவுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்துள்ளனர். மேற்படி முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைத் தடுக்கும்முகமாக மூடப்பட்ட யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டபோது நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமண்டபத்தில் ஒன்றுகூடி இறுதிப் போரின்போது கொல்லப்பட்டோருக்கு வணக்கம் செலுத்தினர். இன அழிப்பு அரசினால் கொல்லப்பட்டோரின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி நினைவுகூர்ந்ததுடன் ‘முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காகப் பிரார்த்திக்கின்றோம்’ என எழுதப்பட்ட வாசகமும் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டது.
தொடர்ந்தும் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் அரசு, மாணவர்களுக்கு அச்சமூட்டி அவர்களது குரலை அடக்க முற்பட்டபோதும், நடைபெற்ற இந்நிகழ்வானது இப்படியான நிகழ்வுகள் என்றுமே அடக்கப்பட முடியாதவை என்பதை எடுத்தியம்புகின்றது. இப்படியான ஒடுக்குமுறைகள் தமிழினத்துக்குப் புதியவையல்ல.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ராசகுமாரன் அவர்களை விசாரணைக்கென பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் சித்திரவதை மையமாகிய 4ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. ஜனநாயக வழியிலான ‘இன அழிப்பு நாள்’ நிகழ்வுக்கு எதிரான அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.
இதனைத் தமிழ் இளையோர் அமைப்புகள் வன்மையாகக் கண்டிக்கின்றன.
ஆறு தசாப்தங்களாக இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள், இன அழிப்பின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் போரில் தமது உறவுகளைப் பறிகொடுத்து அரைத் தசாப்தம் கடந்துள்ளது. தொடரும் பாலியல்வதைகள், சித்திரவதைகள், கடத்தல்கள், ஊடக சுதந்திரம் மீதான அடக்குமுறைகள் – அவற்றின் மீதான வெளிப்படையான தாக்குதல்கள், தமிழர் காணிகள் அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவை சிங்களத்தின் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பை எடுத்துக்காட்டுகின்றன.
தமிழ் இளையோர்களும் மாணவர்களும் எப்போதுமே சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினத்துக்கெதிரான அடக்குமுறையின் முதன்மை இலக்குகளாகவே இருந்து வருகின்றனர்.
உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களும் மாணவர்களும் இவ்வாறான மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதுடன் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குத் துணை நிற்போம்.
நாம் கூட்டாக இணைந்து பின்வரும் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துகின்றோம்:
1. உடனடியாக போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்புக் குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிரான சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும்.
2. சிறிலங்காவினால் தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பைத் தடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழர் தாயகத்தில் இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.
3. ஈழத்தமிழரின் கருத்தினை அறிந்துகொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின்கீழான பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படல் வேண்டும்.
4. ஈழத்தமிழரின் உரிமைகளான சுயநிர்ணயம் மற்றும் இறைமை போன்றவை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
கூட்டறிக்கை ஒப்பம்:
தமிழ் இளையோர் அமைப்பு – ஆஸ்திரேலியா
தமிழ் இளையோர் அமைப்பு – கனடா
தமிழ் இளையோர் அமைப்பு – டென்மார்க் (திசைகள்)
தமிழ் இளையோர் அமைப்பு – பிரான்ஸ்
தமிழ் இளையோர் அமைப்பு – ஜேர்மனி
தமிழ் இளையோர் அமைப்பு – இத்தாலி (ஜோவானி தமிழ்)
தமிழ் இளையோர் அமைப்பு – நியுசிலாந்து
தமிழ் இளையோர் அமைப்பு – நோர்வே
தமிழ் இளையோர் அமைப்பு – சுவீடன்
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்லாந்து
தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராட்சியம்