இதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரில் கண்ட சாட்சியால் வரையப்பட்ட முள்ளிவாய்கால் சோகக் காட்சிகள், தமிழீழ மண்ணினால் வரையப்பட்ட தமிழீழ வரைபடம், இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்காலில் உயிர்நீத்த மக்களின் இரத்தம் உறைந்த மண், பழைய காலத்தில் உணவு செய்முறைகளை குறித்து வைக்கும் ஓலைச் சுவடிகள், தமிழீழத்தில் உள்ள இயற்iகாப் பொருட்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தமிழீழ சின்னங்கள் ஆன சிறுத்தை, வாகை, கார்த்திகைமலர், மற்றும் பறையை விவரிக்கும் எழுத்தாக்கங்கள், மண் குவளை, பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பனாட்டு, புழுக்கொடியல், மற்றும் தமிழருக்கு என்ற தனிபட்ட உணவான இராசவள்ளிக்கிழங்கு ஆகியன மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
“இளந்தளிர் 2011” நிகழ்வு மாலை 4.45 மணியளவில் மண்டப முன்றலில் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் பாரதியினால் தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்ட்டது. பிரித்தானியாவில் நீண்ட நாட்களின் பின் பொதுமக்கள் முன்னிலையில் தேசியக் கொடி ஏறியதை கண்ட மக்கள் ஆனந்ததில் கண்ணீர் மல்கினர்.
இதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு ஜெயானந்தமூர்த்தி, திரு மகேஸ் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களான சோபி, ஜீவனி, பிரிந்தா ஆகியோரால் பொது சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.“இளந்தளிர் 2011” இன் கருவான ஈழத்தமிழர் அடையாளத்தை உணர்த்தும் வகையில் தமிழீழ தேசிய வாத்தியமான பறையுடன், தமிழர் பாரம்பரிய வாத்தியங்களான முரசு, தப்பை, உடுக்கை, சங்கு மற்றும் கொம்பு ஆகியவனவின் ஒலியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
எங்கள் உயிருக்கு உயிரான தமிழ் தாயை வாழ்த்தி அவர்களின் உணர்வுகளை நடனத்தின் மூலம் வெளிக்காட்டினர் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள். தமிழின் பெயர் உடைய நாட்டை கட்டியெழுப்புவோம் என சபதம் இட்டனர் இந்த இளையோர். தொடர்ந்து ஈழத்தமிழரின் பெருமையை தங்கள் தேசிய கானங்கள் மூலம் மீட்டெடுத்தனர் தமிழீழ இசைக்குழுவினர்.
“ஈழத்தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்” அங்கு வந்திருந்த இளையோருக்கும் சிறுவர்களிற்கும் இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்க தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் பைரவியால் “எனது அடையாளம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய உரை நிகழ்த்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பல பாடசாலை மாணவர்களின் எழுச்சி கானங்களுக்கான நடனம் தமிழரின் இன்றைய நிலையை கண் முன் காட்டியது.
இந்த நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக அமைந்தது வடகிழக்கு பாடசாலை மாணவர்களின் நாடகம். கொடிய அரக்கனின் பிடியில் தத்தளிக்கும் தமிழர்கள் வீறு கொண்டு பொங்கி எழுந்து உரிமை குரல் எழுப்பதை தங்கள் மழலை மொழியில் தமிழர்களுக்கே உள்ள வீரத்துடன் சித்தரித்தனர்.
தொடர்ந்து வீணை கச்சேரி, வில்லுப்பாட்டு, கவிதை, உரை என பல விதத்தில் ஈழத்தமிழ் கலாச்சாரம், அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை நினைவு படுத்தினர் இளையோர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ் இளையோர் அமைப்பு பற்றிய சிறிய தொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டது. இமை திறந்து எமது அடையாளமான தமிழீழம் வெல்ல உரிமைக் குரல் எழுப்ப தங்களுடன் இணைய அழைக்கின்றனர் ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர்.
இறுதியாக தமிழ் இளையோர் அமைப்பின் எழுச்சி நடனத்துடனும் உறுதி மொழியுடனும் இந்த நிகழ்வு நிறைபெற்றது. இளந்தளிர் இன்னும் வளரும். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும.; ஈழ தேசம் எங்கள் உரிமை. கானல் நீரா தமிழீழம்? நெருங்கியவுடன் இல்லாமல் போவதற்கு ஒற்றுமையுடன் செயல்பட்டு வென்று எடுப்போம் எம் தமிழீழத்தை.