கடந்த இரண்டு நாட்களா பல்கலைக்கழக வகுப்புக்களை புறக்கணித்து தமது எதிரிப்பினை வெளிப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் உணர்வுகளுக்கு தமிழ் இளையோர்கள் மதிப்பளிக்கின்றோம். பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிவுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்துள்ளனர். மேற்படி முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைத் தடுக்கும்முகமாக மூடப்பட்ட யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டபோது நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமண்டபத்தில் ஒன்றுகூடி இறுதிப் போரின்போது கொல்லப்பட்டோருக்கு வணக்கம் செலுத்தினர். இன அழிப்பு அரசினால் கொல்லப்பட்டோரின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி நினைவுகூர்ந்ததுடன் ‘முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காகப் பிரார்த்திக்கின்றோம்’ என எழுதப்பட்ட வாசகமும் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டது.தொடர்ந்தும் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் அரசு, மாணவர்களுக்கு அச்சமூட்டி அவர்களது குரலை அடக்க முற்பட்டபோதும், நடைபெற்ற இந்நிகழ்வானது இப்படியான நிகழ்வுகள் என்றுமே அடக்கப்பட முடியாதவை என்பதை எடுத்தியம்புகின்றது. இப்படியான ஒடுக்குமுறைகள் தமிழினத்துக்குப் புதியவையல்ல.
தாயகத்தில் இருக்கும் மாணவர்களின் குரல்களை நசுக்க சிங்கள அரசு முனையும் இத்தருணத்தில் புலம்பெயர்ந்து வாழும் இளையோர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்து எமது சொந்தங்களுக்காக ஓங்கி குரல் கொடுப்போம். அங்குள்ள மாணவர்களுக்கு இடம்பெறும் வன்முறைகளையும் கொடுமைகளையும் நாம் வாழும் நாடுகளிலுள்ள மக்களுக்கும் அரசுகளுக்கும் விழிப்புணர்வை கொண்டுவருமுகமாக போராட்டங்கள் இடம்பெறும். இதன் ஒரு வெளிப்பாடாகவே இன்று அனைத்து இளையோர் அமைப்புக்களாலும் சமூக வலைத்தளங்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான விழிப்புணர்வை நிறைவேற்றினார்கள். உலகம் முழுவதுமுள்ள 100க்கும் அதிகமான இளையோர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என் பலரும் எமது மாணவர் சமுதாயத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
அதேபோல தமிழரல்லாத ஏனைய இனத்தவரும் எங்களது இவ் வேலைத்திட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள் . முக்கியமாக எமது மாணவர்களின் வீரத்தை பாராட்டியும் அவர்களுக்கு உறுதுணையாக அனைத்து இளையோர்களும் இருப்போம் என்றும் இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசினை கண்டித்தும் இளையோர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள்.
தமிழ் இளையோர் அமைப்பினர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: http://www.tyouk.org/?p=1779
சமூக வலைத் தளத்தில் பதியப்பட்ட கருத்துக்கள் சில :
@PrabaPillai: “@itisprashanth: ஈழத்திலிருக்கும் அனைவரும் எம்மக்கள்,இவ்வுலகில் இருக்கும் வரை இயன்றவற்றை அவர்களுக்கு செய்வோம் பெருமையுடன் #HandsOffJaffnaUni
@KPrakan: உண்மைகள் மறைக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு இன்று என் இனத்தின் எதிர்காலமான மாணவ சமுதாயம் அச்சுறுத்த படுகின்றது #HandsOffJaffnaUni
@Lathuzhan: தடைவிதிப்பதன் மூலம் நினைவுகளை அழித்துவிட முடியாது! #HandsOffJaffnaUni #Tamils
தமிழ் இளையோர்களும் மாணவர்களும் எப்போதுமே சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினத்துக்கெதிரான அடக்குமுறையின் முதன்மை இலக்குகளாகவே இருந்து வருகின்றனர்.
உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களும் மாணவர்களும் இவ்வாறான மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதுடன் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குத் துணை நிற்போம்.