எண்பதுகளில் தொடங்கி இற்றை வரை தனது வாழ்நாளில் தேசியத்துக்காக உழைத்த ‘பருதி‘ என்று அழைக்கப்படும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் பொறுப்பாளர் திரு. நடராஜா மதீந்திரன் அவர்கள் சென்ற வியாழக்கிழமை, நவம்பர் 08, 2012 அன்று பிரான்சின் பாரீஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தேசமும் இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளது.
மே மாதம் 2009 க்கு பிறகு புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களின் எழுச்சி என்பது என்றுமில்லாதவாறு உயர்ந்து செல்வதும், இனப்படுகொலை அரசான இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தேசத்தில் மேற்கொண்டு வரும் அரசியல் வேலைத்திட்டங்களும் சர்வதேச பொறிகளிலிருந்தும் தப்ப தமிழீழத்தில் இன அழிப்பினை அரங்கேற்றிவரும் சிங்கள இனவாத அரசானது, புலம்பெயர் நாடுகளில் செயலாற்றிவரும் செயற்பாட்டாலர்களை அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
எமது மக்களுக்குள் குழப்பங்களை உண்டு பண்ண தொடங்கிய இனவாத அரசு தோல்வியைதான் முடிவில் எய்தது. பருதி அண்ணாவின் செயற்பாடுகள் எமது மக்களை மீழ ஒன்றிணைக்க உதவியது இதனை பொறுக்க முடியாத சிங்கள இனவாத அரசு பருதி அண்ணாவை வீதியில் வைத்து கோழைத்தனமாக சுட்டுக்கொன்றுள்ளது.
இவ் நேரத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நாம் பிரான்ஸ் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இப்படுகொலை விசாரணையினை மேற்கொண்டு கொலைக்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல இலங்கை அரசின் மீதும் அதன் ஒட்டுண்ணிகளின் மீதும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் அத்துடன் இத் தாக்குதலை சர்வதேச அரசுகள் கண்டிக்க வேண்டும். எங்களது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு புலம்பெயர் தேசத்தில் எமது தேசியத்திற்காக உழைக்கும் செயற்பாட்டாளர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை வன்மையாக நாம் கண்டிக்குற அதேவேளை எதிரிகளை இனம் கண்டு விழிப்புடன் செயலாற்ற எல்லோரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இத்தருணத்தில், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நாம், செயற்பாட்டாளர் திரு. பருதி அவர்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எமது விடுதலைக்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரசெல்வங்களை வணங்கும் இந்த மாதத்தில் பருதி அண்ணாவையும் நினைவில் நிறுத்தி கொள்வோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”