மாவீரர் நாள் 2014
27.11.2014
எமது அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களுக்கு தமிழ் இளையோர் சார்பாக வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
இன்றைய நாள் எங்கள் அனைவருக்கும் ஒரு புனிதமான நாள் தங்கள் இளமை உணர்வுகளையும், ஆசா பாசங்களையும் துறந்து நமக்காக தங்களது விலைமதிப்பில்லாத உயிரை தந்த அந்த உத்தம வீரர்களை போற்றி தொழுகின்ற நாள், அவர்களது உள்ளங்கள் கற்களால் ஆனவையல்ல மாறாக இலவம் பஞ்சை போன்று மென்மையானது ஈழத்தின் எல்லாத்திசைகளிலும் அவர்களே நடப்பார்கள் எங்கெல்லாம் தீபம் எரிகின்றதோ அங்கெல்லாம் அவர்களே எழுந்து மெல்ல சிரிப்பார்கள் மாவீரர்கள் தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சின்னங்களாயும் காவல் தெய்வங்களாயு துயிலும் இல்லமெங்கும் குடி கொண்டுள்ளனர். அவர்கள் ஈழ மண்ணின் விதையாகவும் ஒளியாகவும் எம் இனத்தின் காவல் தெய்வங்களாக நிலை கொண்டு எம் உணர்வுகளோடும் கனவுகளோடும் கலந்து விட்டார்கள். மாவீரர் நாள் தமிழீழத்தின் தேசிய நாள் தமிழீழம் எங்கும் துயிலுமில்லம் சென்றும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களை பூர்விகமாக கொண்ட நாடுகளிலும் அவர்களிற்கான இந்த நாளில் கல்லறைகளை அமைத்து மாவீரச் செல்வங்களை போற்றி பூசிக்கும் நாள்.
நாம் எமது விடுதலைக்காக ஆண்டாண்டு காலமாக அகிம்சை வழியிலும் சாத்வீக வழியிலும் போராடி வந்தோம் ஆனால் எமது போராட்டத்தை யாரும் மதிக்கவும் இல்லை கண்டு கொள்ளவுமில்லை அதே சமயம் சிங்கள பேரினவாதம் ஈழத் தமிழர்கள் மேல் சொல்லோனாத் துன்பங்களை திணித்து வந்தது எமது இனம் அடக்கி ஒடுக்கப்படுவது கண்டும், உரிமைகள் மறுக்கப்படுவது கண்டும் அன்றைய நாள் எண்களின் அண்ணன் ஆரியத் தேவன் உரிமையை மீட்டெடுக்க ஆயுத வழியில் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் வழியில் பல்லாயிரம் வீர வீராங்கனைகள் வீறு கொண்டு எழுந்தனர். அண்ணன் கரிகாலனின் போராட்டத்திரனையும், வேகத்தையும் கண்டு சிங்களப்படை கதிகலங்கியது, செய்வதறியாது திணறியது. இறுதியில்தான் வீரத் தமிழனை வீழ்த்துவதற்கென்று சர்வதேசத்தின் அதாவது உலக வல்லாதிக்கத்தின் கால்களில் விழுந்து மண்றாடியது அவர்களும் சிங்களத்துடன் கைகோர்த்து எமது முப்படைகளையும் வீழ்த்துவதற்கு பல சதி திட்டங்களை தீட்டினர் தமிழர் படைகள் தனித்து நின்று இறுதி வரை சளைக்காது போராடினார்கள். பல சர்வதேச நாடுகளின் சதிகளின் விளைவாக இறுதியில் முள்ளிவாய்க்கால் உருவானது.அப்போதுதான் நம் தலைவர் போராட்டத்தை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு ஆயுதங்களை மௌனமாக்கினார்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற எமது போராளிகளையும், மக்களையும் ஈவிரக்கமின்றி சிங்கள பேரினவாதம் கொன்று குவித்தது. எஞ்சியவர்களை வதை முகாம்களிற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்தார்கள். இந்த உலகத்தில் யாரும் சிங்களத்தை தட்டிக்கேட்கவில்லை. எமது போராளிகளும் ,மக்களும் பட்ட துன்பத்தை அவர்களை தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் .இருந்த போதும் எமது உறவுகளை காக்க இங்கிருந்து எந்தெந்த வழிகளில் எல்லாம் போரடலாமோ அந்தந்த வழிகளிலெல்லாம் நாம் போராடினோம். அதே போல் தாய் தமிழகத்திலும் எமது தொப்புள்கொடி உறவுகள் போராடினார்கள். ஆனால் எங்கள் யாராலும் அவர்களை காப்பற்ற முடியவில்லை, இருந்த போதும் கால நீரோட்டத்திற்கமைய சர்வதேசம் எங்களை ஓரளவாவது திரும்பி பார்த்திருக்கிறது. இத்தருணத்தை நாங்கள் அனைவரும் கரிசனையுடனும் மிகவும் அவதானமாகவும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எங்களது சுயநிர்ணய போராட்டம் இன்று ஒரு திருப்பு முனையை சந்தித்திருப்பதை நாம் அனைவரும் கண்ணூடாக காண்கின்றோம். சர்வதேசம் எமது போராட்டத்தின் தனித்துவத்தையும் உண்மைத்தன்மையையும் ஓரளவேனும் உணர்ந்திருக்கிறது என்று இளையோர்களாகிய நாங்கள் நம்புகின்றோம். இருந்தும் சிங்கள பேரினவாதம் எம்மக்கள் மீது அடக்கு முறையையும் ஒடுக்குமுறையையும் நன்கு திட்டமிட்டு நிறைவேற்றி வருகின்றது.
தமிழீழ மக்களுக்கும் உலக வாழ்வு தமிழர்களுக்கும் இளையோர்களாகிய நாங்கள் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் நாங்கள் எமது இலட்சியம் தன்னாட்சி சுயநிர்ணயம் போன்றவற்றை உள்ளடக்கிய எமது மாவீரர்களின் ஒரேயொரு கனவான தமிழீழத்தை மீட்டெடுக்கும் பயணத்தில் யார் யாரெல்லாம் பயணிக்கிறார்களோ அவர்களோடு நாமும் கைகோர்த்து பயணிப்போம் என்பதை இந்த புனிதமான மாவீரர் நாளில் தெரியப்படுத்திக் கொள்கின்றோம் .
எங்கள் மாவீரரை விதைகுழியில் விதைக்கின்றவேளையில் இசைக்கப்படும் அந்த பாடல், ‘எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் போட்டு செல்கின்றோம்’. அதில் வரும் வரி ‘அவர்கள் சிந்திய குருதி தமிழீழம் ஏற்பது உறுதி’ என்பது. அவர்களிற்கு இறுதியில் நாம் வழங்கிய உறுதியை காக்கவேண்டியது எமது கடமை அல்லவா?
இந்த மாவீரர்கள் யார்????
நாம் வீடுகளில் நிம்மதியாக உறங்கவேண்டுமென்பதிற்காய், தம் உறக்கத்தைவிட்டு காவலரனில் காவல் நின்றவர்கள் அவர்கள். நாம் உயிர்வாழ தம்முயிர் தந்தவர். அவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. எம் மண்ணிலிருந்து எங்களிலிருந்து எமக்காக களமாடி காவியமானவர்கள்….
முள்ளிவாய்க்கால் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எனினும் எமது வீர மறவர்களினதும் மக்களினதும் சாம்பல் கரைந்து போகவில்லை. அவர்கள் விட்டுச் சென்ற வேகத்தின் திறனாக இளையோர்களாகிய நாம் இன்று ஒருபடி மேலே சென்று வீரியம் கொண்டு புயலென சர்வதசத்தின் முன் எழுந்து நிற்கின்றோம். எமது தலைவர் தந்த ஆணையை நிறைவேற்றுவதே எமது கடமையாக கொண்டு எமது செயற்பாடுகளை சர்வதேச நீரோட்டத்திற்கு அமைவாக நாங்கள் முன்னெடுத்து செல்கின்றோம். போர் விளைந்த சாம்பலிலே புதுவிதிகள் முளை கொள்ளும் , புது விதைகளாய் எழுவோம், விருட்சங்களாக விழுதுவிட்டு எம் மறவர் விட்டுச் சென்ற பாதை தொடர்வோம் என எமது தமிழீழத்தின் ஆன்மாக்களாகிய மாவீரர்கள் மேல் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் …..
தமிழீழ தாயகம் …..