எமது பாசத்துக்கும் அன்புக்கும் உரிய தமிழ் மக்களே இன்று மே 18, உலக வரலாற்று சரித்திரத்தில் பதிக்கப்படவேண்டிய நாள் இன்றாகும். சிங்கள இன வெறி ஆட்டத்தின் அதி உச்ச நாள், முள்ளிவாய்க்காலில் எம் இனத்தை சிதைத்தும், உயிரோடு புதைத்தும், கொத்துகுண்டுகளையும் எரிகுண்டுகளையும் வீசி தனது இனப்படுகொலையை அரங்கேற்றிய கொடூர நாளின் முதாலம் ஆண்டு இன்று ஆகும்.
எமது மக்களையும் காவலர்களையும் முள்வேலி சிறைச்சாலைக்குள் அடைத்து ஈவிரக்கமில்லாமல் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அரங்கேற்றிய வண்ணம் எமது தாயக பூமி எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதை, காணாமற்போதல் என்பனவற்றையும் தொடர்ந்த வண்ணம் உள்ளன சிங்கள பேரினவாத அரசும் அதன் ஒட்டுக்குழுக்களும். இத்துடன் மட்டும் நின்று விடாது எமது தாயக கோட்பாட்டை சிதைக்குமுகமாக சிங்கள குடியேற்றங்களை ஆங்காங்கே பட்டும் படாமல் செய்து வருகின்றது.
எல்லா அழிவுகளையும் சுமைகளையும் எம்மீது சுமத்தி விட்டு, எமது சொந்த நிலங்கள் பறி போய்கொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட சர்வதேசமும், ஐ.நா சபையும் மௌனமாகவே இருந்து வருகின்றது. எம் பாச மிகு தமிழ் மக்களே எமது விடுதலையானது எம் ஒவ்வொருவரினதும் கைகளிலேயே தங்கியுள்ளது. இலங்கை அரசு செய்து முடித்த இனப் படுகொலைகளுக்கு தண்டனை வழங்க தவறியது இந்த உலக நாடுகள், இதை யாரும் எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது ஆதலால் மே 18ஐ ஒரு போர்க்குற்றவியல் நாளாக இந்த சர்வதேசம் அங்கீகரிக்கும் வரை, இந்த நாளை உலக சமுதாயமே நினைவு கொள்ளுமுகமாக மாற்றி அமைக்க தமிழ் இளையோர் அமைப்பாகிய நாங்கள் உங்களுடன் சேர்ந்து நின்று உறுதி எடுத்து கொள்ளுகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்