15th Year – எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியிற்கும் மேம்பாட்டிற்கும் இளையோரின் ஆற்றலும் பங்களிப்பும் இன்றி அமையாதது – Bharathy

தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 15 வருடங்கள் ஆகின்றது. 2005ஆம் ஆண்டில் இருந்து உறுப்பினராக நான் தமிழ் இளையோர் அமைப்புடன் பயணித்துள்ளேன் அதன் பல பரிமானங்களுடன் இணைந்து.

எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியிற்கும் மேம்பாட்டிற்கும் இளையோரின் ஆற்றலும் பங்களிப்பும் இன்றி அமையாதது. எமது விடுதலை போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்த எங்கள் மாவீரர்களும் போராளிகளும் அதன் பெரும் சான்று. இளையோரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்ந்து எமது தேசிய தலைவர் விடாது பல வேலைப்பாடுகளை கட்டமைத்தார். அதில் ஒன்று தான் புலம்பெயர் நாடுகளில் தமிழ் இளையோர் அமைப்பினை நிறுவியது.

பிரித்தனியா இளையோர் அமைப்பு ஆரம்ப காலங்களில் மிகவும் உறுதியான உறவுப் பாலத்தினை எமது மக்களிடையிலும் தாயகம் இடையிலும் கொண்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் இந் நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் சிறுவர்களிடையிலும் எமது போராட்டம், மக்களின் இன்னல்கள், மொழி , மற்றும் எழுச்சி உணர்வுகளை கொண்டு செல்ல பல் வேறு வேலைத் திட்டங்களையும் நிகழ்வுகளையும் மேற்கொண்டு வந்துள்ளது.


தனிப்பட்ட முறையில் பொதுப் பேச்சு மற்றும் கலந்துரையாடல்களில் எனக்கு ஆர்வம் அதிகம் அதனாலே தமிழ் இளையோர் அமைப்பினூடாக பலவேறு இதுபோன்ற நிகழ்வில் கலந்து அந்த ஆற்றலை செம்மைப் படுத்திக் கொண்டேன்.

புலம்பெயர் இளையோர்கள் பலரினது தலைமைத்துவ ஆற்றல்களை தமிழ் இளையோர் அமைப்பு மேம்படுத்தி,
கலை சார்ந்த திறன்களையும் ஊக்கப் படுத்தி வளர்த்துள்ளது என்பது மிகையாகாது.

இருப்பினும் எமது ஆயுதப் போரட்டம் மௌனிக்கப் பட்ட காலகட்டத்திலிருந்து ஈழம் சார்ந்த அம்மைப்புகள் காணும் சில செயற்பாட்டு சிக்கல்கள் தமிழ் இளையோர் அமைப்பும் சந்திக்க நேர்ந்தது. ஸ்ரீலங்கா அரசாங்கம் அதன் மேல் விடுத்த தடை, மற்றும் சமூக ஊடகங்களில் நேர்கொண்ட முடக்கல்களையும் எதிர்கொண்டு அதையும் தாண்டி வளர்ந்து வரும் இளையோர்களை மேலும் உள்வாங்கி நகர்கின்றது.

செயல்பாடுகளில் தொய்வேற்படுவதென்பது சமூகம் மற்றும் விடுதலை சார் அமைப்புகளினால் காலம் தொட்டும் எதிர்கொள்ளப்படும் சிறு தடங்கல். அதில் இருக்கும் அரசியலையும் சிக்கல்களையும் தெளிவான பார்வையுடன் பகுப்பு அறிந்து வருங்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறு தழல் ஆற்றலுடன் இளையோர் தன்னிச்சையாக திடமான தேசிய விடுதலை, இனவிடுதலை, பால் விடுதலை மற்றும் சமூக விடுதலை புரிதல்களை கொண்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

You may also like...