என்னவென்று சொல்ல? ஏதென்று சொல்ல
எப்படித்தான் எழுதிட
பறந்து வந்த செய்தியால்
பதறித் துடிக்கும் எமது இதயம் கேட்கிறதா திக்சி
வாழ்க்கையின் தொடக்கம் அரும்பிய மலராய் – இவள்
வாலிப வயதை வாழ்ந்து முடிக்கு முன்
பொல்லாது காலன் சொல்லாது அழைத்தது தான் ஏன்?
தாளாது துடிக்கும் உற்றவரை தேற்றுவதுதான் எப்படி?
அய்யகோ! நெஞ்சம் தாங்குதில்லையே?
எத்தனை கனவுகள் பெற்றவர்களுக்கு
எவ்வளவு ஆசைகள் எங்கள் திக்சிக்கு
எள்ளவும் நினைக்காத பிரிவு உடன்பிறப்புகளுக்கு
இத்தனையும் கொண்டு போனதோ? பொல்லாத நோய்
வீட்டுக்கு கடைக்குட்டி மகளாய் தலைகுனிந்து
படித்து முடித்தாய்
நாட்டுக்கு நலம் தரும் ஒரு மகளாய் – உன்
கடமை தவறாது புரிந்தாய்
படித்த பட்டம் பயனாய் உழைத்து அனுபவிக்குமுன்
நாலு சட்டத்துக்குள் நீ அடங்கிவிட்டாயே விட்டத்தில்
மகளாய், சகோதரியாய், நண்பியாய்,
இளையோர் அமைப்பில் இணைந்து
இனமும் தமிழும் வாழ மனமுவந்து உழைத்த
எம் இனிய தோழியே! எம் ஈரவிழிகள்
காயவில்லை துடைக்க நீ வருவாயா?
மீண்டு எழுவாயா? எம் கனவுகள் கூட
கைகோர்ப்பாயா?
நிலம் விட்டு வந்து புலத்திலும் இல்லை நிம்மதி
இவ்வுலக வாழ்க்கை போதுமென்றா திக்சி
அவ்வுலகு சென்றாய்?
கல்லறைகள் வேண்டாம் கனவுகள்
கைகூட இளைய சந்ததிகள் கரம்கோத்து
கதறுகிறோம் வீட்டுக்கும் நாட்டுக்கும்
தேவை என கடமை அழைக்கிறது
எழுந்திடு! விழித்திடு! இரும்பு மங்கையாய்
எங்கள் தோழியே! மீண்டும் ஓர் பிறப்பால்
மீண்டு வந்திடுவாய் எம்மிடம்
வையத்துள் முழுமையாய் வாழாது பாதிவயதில்
தெய்வத்துள் அடங்கிய திக்சியே!
உன் வரவு நோக்கிய ஈரவிழிகளுடன்
தமிழ் இளையோர் நாம்!
ஓம் சாந்தி விழிநீர் அலையோடு
ஆக்கம் தமிழ்மகள் பரா