27ம் திகதி ஞாயிறு காலை, தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் இலண்டனின் 3 வெவ்வேறு இடங்களில் உணவுப் பொருட்களை சேர்ப்பதற்காக கூடினர். இது லெப்டினன் கேணல் திலீபன் அண்ணாவை நினைவில் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஆகும். தியாக தீபம் திலீபன் அண்ணா தமிழீழத்தின் விடியலுக்காகவும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர். அவர் தனது கொள்கையை அகிம்சை வழியில் வெளிப்படுத்தும் பொருட்டு தன்னையே வருத்திக்கொண்டார்.
லெப்டினன் கேணல் திலீபன் அண்ணா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களில் ஒருவர். ஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் தமிழ் மக்களுக்குக்கான நீதியை வேண்டிக்கொடுப்பதற்காகவும் திலீபன் அண்ணா இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். பன்னிரண்டு நாட்கள் நீரின்றி உணவின்றி போராடி புரட்டாதி மாதம் 26ம் திகதி உயிர் நீத்தார்.
திலீபன் அண்ணாவின் 5 அம்ச கோரிக்கைகள்;
1. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
2. தமிழர்களின் இடங்களில் மீழ் குடியிருப்பு என்ற பெயரில் சிங்களவர்களை இருத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு அமையும் வரை இந்த மீழ்குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடகிழக்கு இடங்களில் புதிய காவல்நிலையங்களையும் முகாங்களையையும் திறக்கக் கூடாது.
5. தமிழ்க் கிராமங்களிலிருந்தும் பள்ளிக் கூடங்களிலிருந்தும் ஶ்ரீலங்கா இராணுவமும் காவலர்களும் வெளியேறவேண்டும். அத்தோடு “ஊர் காவலர்“ களிடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் இந்திய இராணுவத்தின் மேற்பார்வைக்குக் கீழ் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும்.
லெப்டினன் கேணல் திலீபன் அண்ணாவின் தியாகத்தை ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்கள் தாம் வாழும் அனைத்து இடங்களிலும் நினைவு கொள்கின்றனர். அவரது 33ம் ஆண்டு நினைவாகவே இலண்டனில் உணவுப் பொருட்கள் சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ் உணவுப் பொருட்கள் “Trussel Trust Food Bank”கிடம் கொடுக்கப்பட்டன. இப்போதைய உலக சூழலக்கு இது ஒரு மிகச் சரியான வேலைத்திட்டாமானதாக தமிழ் இளையோர் அமைப்பினர் நம்பினர்.
இந்நிகழ்வை ஒட்டி பல துண்டுப் பிரசுரங்களில் மற்றும் சமூகவலைத் தளங்களில் இந்நிகழ்வைப் பற்றியும் தியாக தீபம் திலீபன் அண்ணா பற்றியும் ஏனைய மக்கள் அறிந்து கொள்ளுமாறு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வெளிநாடுகளிலிருந்து வந்து பிரித்தானியாவில் கல்வி கற்கும் மாணவர்கள், ஆதரவுக்காகவும் உணவிற்காகவும் “Trussel Trust Food Bank” போன்ற இடங்களை நாடுகின்றார்கள். அவர்களின் இந்த சேவை மிகவும் பாரட்டப்படவேண்டியது ஆகும். அவர்களுக்கான இந்த உதவியைச் செய்ய ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் தமிழ் இளையோர் அமைப்பினரின் நன்றிகள்
தியாக தீபம் திலீபன் அண்ணா தமிழீழத்தின் விடியலுக்காக தனது உயிரைத் தியாகம் செய்தார். அவர் போராடுவதற்குத் தேர்ந்தெடுத்த பாதையால் உலகின் கவனத்தையே தன்மீது திருப்பினார். அகிம்சை வழியில் தன் இனத்தின் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார். தனது எதிர்காலத்தை விடுத்து தமிழர்களின் எதிர்காலத்திற்காக போராடினார். இத்தகைய மாவீரனை நினைவுகொள்வது மட்டுமல்லாது அவர் நினைவில் இத்தகைய அரிய செயற்பாட்டை செய்ததன் மூலம் தமிழ் இளையோர் அமைப்பு தாயகம் நோக்கிய வேலைகளில் மேலும் உறுதி அடைகிறது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”